

மதுக்கூடங்கள் ஒப்பந்த விவகா ரத்தில் அரசின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித் தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. சோமனூர், சூலூர், ராமநாதபுரம் ஆகியஇடங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கோவையில் ரூ.58 கோடி மதிப்பில், 10 லட்சத்து 78 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 10-ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் யார் யாருக்கு இழப்பீட்டுத் தொகை வரவில்லையோ அவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, இழப்பீட்டுத் தொகை பெற்றவர்கள் அதிகப்படியாக தற்போது கேட்கின்றனர். கூடுதல் இழப்பீடு வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடுவதுதான் சரியானது. இதற்கிடையே சில அமைப்புகள் கூடுதல் இழப்பீடு பெற்றுத்தருவதாக விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்.
மதுக்கூடங்கள் (பார்) நடத்துவதற்கான டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது. அதிகமான விலைப்புள்ளி கேட்டவர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுக்கூடம் ஒப்பந்த உரிமம் எடுக்க ஏற்கெனவே இருந்த 66 விதிமுறைகளில் கூடுதலாக 2 நிபந்தனைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் மதுக்கூடங்கள் நடத்தி வந்தார்கள் என்பதற்காக, அரசின் நிபந்தனையை தளர்த்த முடியாது.
மதுக்கூடங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.312 கோடி வருமானம் கிடைத்துவந்த நிலையில், கடந்தாண்டு ரூ.89 கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. 1,551 கடைகளில் ஒப்பந்தம் இன்றி மதுக்கூடங்கள் இயங்கியுள்ளன. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 134 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 1,200-க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர். அனைவருக்கும் டோக்கன் வழங்கினால் ஜல்லிக்கட்டை 3 நாட்கள் நடத்த வேண்டியிருக்கும். கோவையில் ஜல்லிக்கட்டு நடக்குமா என்பதை அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பின்னர்தான் முடிவு செய்ய முடியும். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடந்தால் கோவையிலும் கண்டிப்பாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.