கெலமங்கலம் அருகே அரசுப் பேருந்தில் இறங்கும் போது தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

கெலமங்கலம் அருகே அரசுப் பேருந்தில் இறங்கும் போது தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு
Updated on
1 min read

கெலமங்கலம் ஒன்றியம் உத்தனப்பள்ளி அடுத்த சினிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரின் மகள் நவ்யா (17) கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உத்தனப்பள்ளி - கெலமங்கலம் செல்லும் அரசுப்பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த 3-ம் தேதி மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பகெலமங்கலத்தில் இருந்து தருமபுரி செல்லும் அரசுப்பேருந்தில் பயணித்துள்ளார்.

மாணவி நவ்யா இறங்க வேண்டிய சினிகிரிப்பள்ளி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் அரசுப் பேருந்து சென்றுள்ளது. இதனால் பதற்றமடைந்த மாணவி, ஓட்டுநர் பேருந்தை நிறுத்த மெதுவாக சென்ற சமயத்தில் மாணவி அவசரமாக இறங்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்த பேருந்திலேயே அழைத்துச் சென்று உத்தனப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளித்துள்ளனர். பின்பு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாணவி நவ்யா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, கவனக் குறைவு, அலட்சியமாக பேருந்து இயக்குதல், விபத்து ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் வெங்கடேஷ், நடத்துநர் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in