சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி முதல்வர் விழிப்புணர்வு: கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி முதல்வர் விழிப்புணர்வு: கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் எல்டாம்ஸ் சாலை வரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து முகக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடித்து, அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து, கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குறிப்பாக, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், சேப்பாக்கம், ரிச்சி தெரு அருகில், காஸ்மோபாலிடன் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம்விளக்கு பகுதி, தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்ஐஇடி கல்லூரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். அரசுஎடுத்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பொதுமக்களும் முதல்வரிடம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in