எழும்பூரில் மூதாட்டி படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

எழும்பூரில் மூதாட்டி படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
Updated on
1 min read

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வந்தவர் சாரதா (72). இவரது 2 மகன்களும் கேரள மாநிலத்தில் வசித்து வருகின்றனர். சாரதாவின் தம்பி திவாகர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் தான்யா சாரதாவுடன் வசித்துக் கொண்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று மாலையில் தான்யா வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பின் வெளியே சென்ற தான்யா இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது படுக்கை அறையில் சாரதா ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்ததை கண்டார். மூதாட்டியின் கழுத்து மற்றும் இடது பக்க காது அறுக்கப்பட்டிருந்தது. கழுத்தில் இருந்த செயின் மற்றும் காதில் இருந்த கம்மலை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த தான்யாவின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் வசிப்பவர்கள் ஓடி வந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த எழும்பூர் போலீஸார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் கதவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். கல்லூரி மாணவி தான்யா, குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் செக்யூரிட்டி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் படிக்கட்டு மற்றும் லிப்ட் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொலை யாளியின் உருவம் பதிவாகி யுள்ளதா என்று போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. மிகவும் பரபரப்பாக காணப்படும் எழும்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் கொலைகள்

எழும்பூர் செரியன் கிரசன்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து அந்த டாக்டர் எம்மா கோன்சால்வெஸ் (82) என்ற மூதாட்டி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி படுக்கை அறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கடந்த 2015-ம் அக்டோபர் 19 ம் தேதி மூதாட்டியை கொலை செய்ததாக வீட்டுக்கு வந்து போகும் எலக்ட்ரீஷியன் மகன் சிறுவர் கோர்ட்டில் சரணடைந்தான். கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுவனுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது அதே எழும்பூர் பகுதியில் மீண்டும் ஒரு மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in