

உளுந்தூர்பேட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் முதியோர் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்ப டுகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையின்பேரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக் கும் விண்ணப்பதாரர்களின் மனுக்களை பரிசீ லிப்பதில்லை. மாறாக மாற்று வழிகளில் செலவு செய்வோருக்கு மட்டுமே அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற பரிந்துரைக்கின்றனர். “எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் தான் அரசின் உதவியை எதிர்பார்த்து வருகிறோம். ஆனால் அலுவலர்களோ எங்களிடம் பணம் கேட்பதோடு, 'விஏஓ-வை பார்த்துட்டு வா, ஆர்ஐ-யை பார்த்துவிட்டு வா' என அலைக்கழிப்பது தான் வேதனையாக உள்ளது. யார் யாரிடம் எத்தனை மனு கொடுப்பது என்பதே தெரியவில்லை. குறிப்பாக அலுவலகங்களில் வருவாய் துறையினரை காட்டிலும், அலுவலக உதவிக்காக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் மரியாதையின்றி பேசுவதும் வேதனையாக உள்ளது” என முதியோர் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மாவட்டஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜூவிடம் கேட்டபோது, “மனுக்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தான் பரிசீலிக்கப்படும்” என்று கூறியதோடு முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் உளுந்தூர்பேட்டை உ.நெமிலிகிராமத்தைச் சேர்ந்த பிச்சன் என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்ததை அறிந்த தனி வட்டாட்சியர் ராஜூ, டிசம்பர் 25 அன்று விடுமுறைதினத்தைக் கூட பொருட்படுத்தாமல் 2 மணி நேரத்தில் மனுவை பரிசீலித்து பிச்சனுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களிலும் குறுஞ்செய்தி பரவியது.
அவ்வாறு உடனடி நடவடிக்கை என தகவல்கள் பரிமாறப்பட்டாலும் அந்த அலுவ லகத்தில் அலைக்கழிப்பு தொடர்வதாக முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தெரி விக்கின்றனர்.