

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளின் உண்மைத் தன்மை குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்வோம் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும்வேளாண்துறை சார்பில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், ஆட்சியர் மோகன், மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
1,243 பயனாளிகளுக்கு வீடு கட்ட உதவித் தொகை
இந்நிகழ்வில், ‘பிரதம மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 47 கிராம ஊராட்சிகளில் தலா ரூ.2,76,570 வீதம் 1,243 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 37 லட்சத்து 76 ஆயிரத்து 510 மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார். அப்போது அமைச்சர் மஸ்தான் கூறியது:
தமிழகத்தில் அதிகப்படியா னோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, கரோனா தொற்றி லிருந்து தங்களை காத்துக் கொண்டனர். தற்போது, அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று வழிகாட்டு முறைகளை தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு சிறந்ததாக கருதப்படும் பாதுகாப்பு ஆயுதம் தடுப்பூசியாகும். தற்போது 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப் படுகிறது. ஊராட்சி மன்றங்களில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளின் தேர்வு வெளிப்"படையாக இருக்க வேண்டும் பயனாளிகளின் உண்மைத் தன்மை குறித்து மாவட்ட அளவிலான குழு திடீர் ஆய்வு மேற்கொள்ளும். தகுதியற்ற பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது கண்டறிந்தால் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்நிகழ்வில் வேளாண் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் மானிய விலையில் நெல் நேரடி விதைப்பு கருவிகள் மற்றும் தென்னை மரம் ஏறும் கருவிகள் வழங்கப்பட்டன. மேலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நிரந்தர பந்தல் அமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.36 ஆயிரம் மதிப்பீட்டில் 8 விவசாயிகளுக்கு அரசின் மானியத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.