

உடுமலையில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். பல்வேறு வழக்கு களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 13-ம் தேதி, கலப்புத் திருமண தம்பதி சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்து வமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாய மடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக விசாரிக்க, உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, பட்டிவீரன் பட்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு தனிப்படைகள் விரைந்தன. நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று காலை முகமூடி அணிந்தவாறு, 5 பேரை உடுமலை 1-வது மாஜிஸ்திரேட் வித்யா முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.அதன் பிறகு அவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘‘உடுமலையில் நடை பெற்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீஸார் தேடினர். உடுமலை அருகே பெதப்பம்பட்டி யில் நடைபெற்ற வாகனச் சோதனை யில், பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, திண்டுக் கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மற்றவர்கள் பதுங்கிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், மற்றவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன் படுத்திய ஆயுதங்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பழநி, ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் மணிகண்டன் (25), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ஜெகதீசன் (31), திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகேசன் மகன் மைக்கேல் (எ) மதன் (25), திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் செல்வக்குமார் (25), அண்ணா நகர், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மாடசாமியின் மகன் மணிகண்டன் (39) ஆகியோர் கைது செய் யப்பட்டுள்ளனர். இதில், கொலை யாளிகளுக்கு தம்பதியை அடை யாளம் காட்டிவிட்டு தலைமறை வான தனராஜ் என்பவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றனர்.
பெண்ணின் தந்தை சின்னச்சாமி ஏற்கெனவே நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அனைவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனிப்படை போலீஸார் மேலும் கூறியதாவது: இவ்வழக்கில் கைதான ஜெகதீசன் மீது ஏற் கெனவே திண்டுக்கல் மாவட்டம் வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் இவர் மீது பல்வேறு வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
பழநியைச் சேர்ந்த மணிகண் டன் மீதும் பழநி காவல் நிலை யத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மீது தேனி மாவட்டம், அல்லிநகரம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜெகதீசனும், மதனும் பழநிக்கு வந்தபோது சந்தேகத்தின் பேரில் போலீஸார் அழைத்துச் சென்று கைரேகை பதிவு செய்தனர். அப்போது, காவல் நிலையத்துக்கு வந்த கவுசல்யாவின் தந்தை, ஜெகதீசனும், மதனும் நல்லவர் கள், அவர்களுக்கு தான் பொறுப் பேற்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.