

தருமபுரியில் நேற்று, காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியவர் அளித்த பேட்டி காங்கிரஸார் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டியைச் சேர்ந்தவர் புத்தன். இவர் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் பிரிவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகியாக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு செயல்பாடுகள் பிடிக்காமல் போனதால் நேற்று தடாலடியாக புதிய கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் அறிமுக கூட்டத்தை தருமபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடத்தினார்.
கூட்டத்தின்போது அவர் அளித்த பேட்டி:
தமிழக காங்கிரஸ் கட்சியில் நடக்கும் பல செயல்பாடுகள் சோனியா, ராகுல் கவனத்திற்கு செல்லாத வகையில் மாநில நிர்வாகிகள் பலர் தடுத்து விடுகின்றனர். கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் பலருக்கும் இது மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி விடுகிறது. மொத்தத்தில் தொண்டர்களுக்கு மரியாதை தராத கட்சி காங்கிரஸ். இந்நிலை மாறாதா? என்று காத்திருந்து ஏமாந்த நிலையில் தான், வேதனையில் உழலும் தொண்டர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளேன்.
இதன் மூலம் தன் தொண்டர்களிடம் கொண்டிருந்த அலட்சியத்தின் பலனை காங்கிரஸ் உணரப் போகிறது. கட்சி தொடங்குவதாக மேலோட்டமாக தகவல் கூறிய நிலையிலேயே தமிழகம் முழுக்க 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். மன வருத்தங்களுடன் காங்கிரஸில் உள்ள தொண்டர்கள், விரைவில் எங்கள் கட்சியில் வந்து இணைய உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் எங்கள் கட்சியை பதிவு செய்வதில் சில சிரமங்கள் நிலவுகிறது. எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை. இந்த தேர்தலின்போது அதிமுக-வை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். அக்கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் பிரச்சாரத்திற்கு செல்வோம். எங்கள் கட்சியின் சிறந்த கொள்கைகள், உயரிய சிந்தனைகளை சமூக வலைத் தளங்கள் மூலம் மக்களிடம் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த உள்ளோம். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குள் எங்கள் கட்சி ஆலமரம் போல விழுதுபரப்பி வியப்பை ஏற்படுத்தப் போகிறது.
இவ்வாறு பேசினார்.