

நாகை மாவட்டம் நாகூர் ஆண்ட வர் தர்காவில் 465-வது பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நாகை ஜமாத் தில் இருந்து நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட கப்பல் பல்லக்கு, மந்திரி பல்லக்கு, செட்டி பல்லக்கு, சாம்பிராணி பல்லக்கு, சின்ன ரதம் ஆகிய 5 பல்லக்குகளில் மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் பல்லக்குகள் புறப்பட்டன. புதுப்பள்ளி தெரு, சாலா பள்ளி தெரு, யாகூசைன் பள்ளி தெரு, பெரிய கடை வீதி, அண்ணா சிலை, புதிய பேருந்து நிலையம், ஏழை பிள்ளையார் கோயில் சந்திப்பு, பால்பண்ணைச்சேரி, வாணக்காரத் தெரு, செய்யது பள்ளி தெரு வழியாக நாகூர் அலங்கார வாசலை நேற்று இரவு கொடி ஊர்வலம் வந்தடைந்தது.
அங்கு. மந்திரி பல்லக்கு, செட்டி பல்லக்கில் கொண்டுவரப்பட்ட நாகூர் மினராக்களில் ஏற்ற வேண்டிய புனித கொடிகள் பல்லக்கிலிருந்து இறக்கப்பட்டன. தொடர்ந்து, தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சிறப்பு துவா ஓதிய பின்னர், 5 மினராக்களிலும் ஒரேநேரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவை முன்னிட்டு நாகை எஸ்.பி ஜவஹர் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் ஜன.13-ம் தேதி இரவு நடைபெறும். ஜன.14-ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜன.15-ம் தேதி கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 17-ம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.