

பொது இடங்களில் குப்பை போட்டாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் தூய்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அந்தத் திட்டம் தோல்வியடைந்துவிட்ட நிலையில், மக்களைக் கட்டாயப்படுத்தி தூய்மைப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகத் தோன்றுகிறது.
அதுமட்டுமின்றி, தவறு செய்பவர்களுக்குத் தண்டனை அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது இடங்களை அசுத்தப்படுத்துவோருக்கு குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளை அறிவுறுத்தியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் சரியானதாக இருந்தாலும், அந்த நோக்கத்தை அடைவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனைத்து மாநகரங்களிலும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் மாதத்துக்குள் ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஏதேனும் ஒரு வட்டத்திலாவது அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 முதல் 15 மாநகராட்சிகளில் அனைத்து வட்டங்களிலும், 2018-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து மாநகரங்களில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கட்டளையிட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது மத்திய அரசு எதிர்பார்க்கும் பயனை ஒருபோதும் தராது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக அனைத்து சேவைகள் மீதும் மத்திய அரசு 0.5 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு நிதியை ஒதுக்கி போதிய அளவில் கழிப்பிடங்களையும், குப்பைத் தொட்டிகளையும் அமைக்க வேண்டும்.
அதற்குப் பிறகு அபராதம் விதிக்கும் திட்டத்தை கொண்டு வருவதுதான் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். எனவே, மாநகரங்களில் பொது இடங்களில் குப்பை போட்டாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெறும்படி மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.