பெண் குறித்து யூடியூபில் அவதூறு கருத்து: டிக் டாக் பிரபலம் ‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் கைது

பெண் குறித்து யூடியூபில் அவதூறு கருத்து: டிக் டாக் பிரபலம் ‘ரவுடி பேபி’ சூர்யா, சிக்கந்தர் கைது
Updated on
1 min read

கோவை: பெண் குறித்து யூடியூப் சேனலில் அவதூறு கருத்துப் பதிவிட்ட, டிக் டாக் பிரபலம் ‘ரவுடி பேபி’ சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர்ஷா ஆகியோரை போலீஸார் இன்று (ஜன.4) கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் சூர்யா (35). டிக் டாக் செயலியில், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் இயங்கி வந்த இவர், தினமும் அதில் பல வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தர்ஷா. இவர்கள் இருவரும் டிக் டாக்கில் ஆபாசமான முறையில் வீடியோக்களைப் பதிவிடுவதாக புகார்கள் எழுந்தன. டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர், இருவரும் யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்தி வந்தனர். இவர்கள் மீது கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

அதில், ‘‘நான் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி, விழிப்புணர்வு மற்றும் சினிமா நிகழ்ச்சிகளைப் பதிவிட்டு வருகிறேன். ‘சூர்யா மீடியா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற ‘ரவுடி பேபி’ சூர்யா, ‘சிங்கர் சிக்கா அபிஷியல்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் சிக்கந்தர்ஷா என்ற சிக்கா ஆகியோர், தங்களது யூடியூப் சேனல்களில் ஆபாசமான முறையில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். நான் அதைக் கண்டித்ததால், சூர்யா, சிக்கந்தர்ஷா ஆகியோர் என்னையும், என் குடும்பத்தினரையும் அவதூறாக, ஆபாசமாக, உருவ கேலி செய்தும், அருவெறுக்கத்தக்க வகையில் தங்களது யூடியூப் சேனலில் பேசுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை

அதன் பேரில், போலீஸார், 294 (பி), 354 (ஏ), 354 (டி), 509, 109, 66 (டி), 67 ஐ.டி.சட்டப்பிரிவு, பெண் வன்கொடுமை ஆகிய 8 பிரிவுகளின் கீழ் சூர்யா, சிக்கந்தர்ஷா மீது வழக்குப் பதிந்தனர். தனிப்படை போலீஸார், மதுரையில் இருந்த சூர்யா, சிக்கந்தர்ஷா ஆகிய இருவரையும் இன்று (ஜன.04) கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, ‘‘கைதான இவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது யூடியூப் சேனல் பக்கத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in