

சென்னை: கோவை விமான நிலையத்தில், கைத்துப்பாக்கி எடுத்து வந்த கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை, அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்த பின்னரே, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்துக்கு இன்று (ஜன.4) அதிகாலை பயணி ஒருவர் வந்தார். அவரது உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் பரிசோதித்தனர். அப்போது, அவரது துணிப்பையில், 22 எம்.எம் அளவு கொண்ட பழைய கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், பீளமேடு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து கைத்துப்பாக்கி கொண்டுவந்த நபரிடம் விசாரித்தனர். அதில், கைத்துப்பாக்கி கொண்டு வந்து பிடிபட்டவர் கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள, பட்டாம்பியைச் சேர்ந்த கே.எஸ்.பி.ஏ.தங்கல் (60) எனத் தெரிந்தது.
மேலும், இவர், கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வருவதும், பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவராக இவர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. கோவையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்துக்குச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
மேலும், அவரிடம் விசாரித்தபோது, அந்தக் கைத்துப்பாக்கி அவரது தந்தை சொந்தப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வந்ததும், துணிகளோடு துப்பாக்கி, தோட்டாக்கள் இருந்தது தெரியாமல் அவற்றை எடுத்து வந்துவிட்டதாகவும் கே.எஸ்.பி.ஏ.தங்கல் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீஸார் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஆயுதத்தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.