Last Updated : 04 Jan, 2022 05:54 PM

 

Published : 04 Jan 2022 05:54 PM
Last Updated : 04 Jan 2022 05:54 PM

பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: டி.ராஜா 

கோவையில் இன்று (ஜன.4) செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா. அருகில் கட்சி நிர்வாகிகள்.  | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழக அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கோவையில் தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கோவையில் இன்று (ஜன 4-ம் தேதி) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழுக் கூட்டம் வரும் 26 முதல் 28-ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு வரும், அக்டோபரில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் நடக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக தற்போது நாட்டு மக்களை மதம், மொழி, சாதி, கலாச்சாரம் ரீதியாகப் பிளவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை பாஜக அரசு செய்து வருகிறது. கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஷாகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சி முகாம் பள்ளிகளில் நடத்துவது கண்டனத்துக்குரியது. வன்முறையை போதிக்கிற பாசறையாக இப்பயிற்சி முகாம்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு திண்டாட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகளின் பிரதமர் மன்னிப்பு கோரினார். அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது. கார்ப்பரேட்டுகளிடம்தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

பாஜக அரசு முன்பை விட மூர்க்கத்தனத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள், நமது பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் விதமாக உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உச்ச நிலையில் உள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் மற்றும் திட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு குறித்து நாங்கள் முன்னரே பேசியுள்ளோம். இரு கம்யூனிஸ்டுகளும் இணைந்தால் வாக்கு வங்கி சதவீதம் மேலும் அதிகரிக்கும்.

இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். தற்போது, சீனா பான்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக, பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்".

இவ்வாறு டி.ராஜா கூறினார்.

இந்நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x