Published : 04 Jan 2022 04:33 PM
Last Updated : 04 Jan 2022 04:33 PM

கட்டபொம்மன் பிறந்த நாள்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கிவைத்த மாட்டுவண்டிப் போட்டி

கோவில்பட்டி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு வைப்பாரில் நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இதில் மதுரை, சண்முகபுரம் மாட்டுவண்டிகளுக்கு முதல் பரிசு கிடைத்தது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்த நாளையொட்டி வைப்பார் கிராமத்தில் ராஜகம்பள மகாஜன சங்கம் சார்பில் மாட்டுவண்டி எல்கை போட்டி நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் கொடியசைத்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, வைப்பார் ஊராட்சிமன்றத் தலைவர் சக்கம்மாள் ராமர், வைப்பார் கிராம தர்மகர்த்தா வானமல்லுச்சாமி, தூத்துக்குடி மாவட்ட வீரவிளையாட்டுக் கழகச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு வைப்பாரில் நடந்த மாட்டு வண்டி போட்டியில் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த காளைகள்.

இதில், பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் 16 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இதற்கு 16 கி.மீ. போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில், மதுரை அவனியாபுரம் மோகன்சாமி மாட்டுவண்டி முதலிடம் பிடித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பரிசாகப் பெற்றது. 2-வது இடம் பிடித்த சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டுவண்டிக்கு ரூ.91 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த கடம்பூர் கருணாகரராஜா மாட்டுவண்டிக்கு ரூ.71 ஆயிரமும், 4-வது இடம்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் பொன்பேச்சி மருதுபாண்டி மற்றும் மதுரை கல்லாங்குழி பாண்டியராஜன் மாட்டுவண்டிகளுக்கு ரூ.21 ஆயிரமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த சிறிய மாட்டுவண்டிப் போட்டியில் 18 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. இதற்கு 12 கி.மீ. போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் இடம்பிடித்த சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டுவண்டிக்கு ரூ.51 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம்பிடித்த திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி துர்க்காம்பிகை மாட்டுவண்டிக்கு ரூ.41 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த லெக்கம்பட்டி ராமமூர்த்தி மற்றும் கடம்பூர் கருணாகர ராஜா மாட்டுவண்டிகளுக்கு ரூ.31 ஆயிரமும், 4-வது இடம் பிடித்த வீரகுடி மேலசெல்வனூர் முருக அய்யனார் மற்றும் சித்திரங்குடி மாட்டுவண்டிகளுக்கு ரூ.11 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

பின் சாரதி மற்றும் முதல் பரிசு பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வைப்பார் கிராமப் பொதுமக்கள் மற்றும் ராஜகம்பள சங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x