

விவசாயத் தோட்டங்களில் செயற்கை முறையில் கொசுத் தேனீக்களை வளர்த்தால், 30 சதவீதம் மகசூலை அதிகரிக்கலாம் என்பதை மதுரை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி பூச்சியியல் துறையினர் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.
வேளாண்மையின் தேவதைகள் தேனீக்கள். 80 சதவீதம் பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகின்றன. சமீப காலமாக மாறிவரும் தட்பவெப்ப நிலை, பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகரிப் பால், தோட்டங்களில் இருக் கும் 60 சதவீத தேனீக்கள் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அத னால், தற்போது பயிர்களில் மகசூல் குறைந்து வருகிறது.
மதுரை வேளாண்மை பல்கலைக் கழக கல்லூரியில் பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் மா.கல்யாணசுந்தரம் தலைமையி லான குழுவினர், செயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து, அதன் மூலம் மகசூலை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில், பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் உள்ள விவ சாயத் தோட்டத்தில், செயற்கை முறையில் கொசுத் தேனீக்கள் என்னும் ஒருவகை தேனீக்களை வளர்த்து, எல்லா வகை பயிர்களி லும் 30 சதவீதம் மகசூலை அதிகரித் துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் மா.கல்யாணசுந்தரம் கூறியதாவது:
இந்தியாவில் விவசாயப் பயிர் களில் பூச்சித் தாக்குதலால், ஆண் டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லாமல், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை மறைமுக நஷ்டம் ஏற்படுகிறது. இந்த மறை முக நஷ்டம் நேரடியாக ஏற்படாத தால், யாரும் இதை உணர்வ தில்லை.
தேனீக்களில் மலைத் தேனீ, இந்தியத் தேனீ, சிறு தேனீ, கொசுத் தேனீக்கள் முக்கியமானவை. இந்த வகை தேனீக்கள், விவசாயத் தோட்டங்கள், வீடுகள், காடுகளில் காய்ந்த மரப்பொந்துகள், மரத்தின் பட்டைகள், மின்சாரப் பெட்டிகள், குழாய்கள் மற்றும் கட்டிட இடுக்கு களில் அதிகளவில் கூடு கட்டி வாழ் கின்றன. காடுகளை அழிப்பதாலும், தீ வைப்பதாலும், பூச்சி மருந்துகளை அடிப்பதாலும் இந்த வகை தேனீக் கள் அழிகின்றன. இந்த கொசுத் தேனீக்கள், விவசாயப் பயிர்களில் அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெற முக்கியப் பங்கு வகிக்கின்றன. கொத்து கொத்தாகப் பூக்கும் சிறிய பூக்களில் எளிதாக நுழைந்து அயல் மகரந்தச் சேர்க்கை செய்வ தில் கொசுத் தேனீக்களின் பங்கு அளவிட முடியாது.
குறிப்பாக மா, முந்திரி, ஸ்ட்ரா பெர்ரி, பெருநெல்லி, முருங்கை, பயறுகள், தானியங்கள் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பயிர்களிலும் இந்த வகை தேனீக்கள் மூலம் 30 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது. பல்கலைக்கழக விவசாயத் தோட் டங்களில் மரப்பொந்துகள், கட்டிட இடுக்குகளில் இருக்கும் இந்த கொசுத் தேனீக்களை, பானை மற்றும் மூங்கில்களில் சிறிய பிளாஸ்டிக் குழாய்களில் சேகரித்து செயற்கை முறையில் வளர்த்ததால் மகசூல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம்
மா.கல்யாணசுந்தரம் மேலும் கூறும்போது, ‘‘கொசுத் தேனீக்கள் அளவில் மிகவும் சிறியவை. மற்ற தேனீக்களைப் போல இவை கொட்டாது. அதனால், இவற்றை பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கூட வளர்க்கலாம். விவசாயிகள் தங்களுடைய தோட்டங்களில் இருக்கும் இந்த கொசுத் தேனீக்களை அறிவதில்லை. இதன் தேன் புளிப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்டது. சிறந்த நோய் நிவாரணியாக விளங்குகிறது.
இதன் மெழுகு தங்க நகைகளில் அடைப்புப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கொசுத் தேனீக்களின் ஒரு கிலோ தேன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கிறது. அதனால் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் இந்த வகை தேனீக்களை வளர்த்தால் மகசூல் அதிகரிப்பு, தேன் உற்பத்தி என இரட்டிப்பு லாபம் அடையலாம்” என்றார்.