

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் 250ஆண்டுகள் பழமையான ‘ஹுமாயூன் மகால்’ அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய் வாரிய தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்த இக்கட்டிடத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, போக்குவரத்து, வருவாய், கைரேகை ஆய்வியல் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்ததால் 2005 முதல் இக்கட்டிடம் பயன்பாட்டில் இல்லை. 2012-ல்நேரிட்ட தீ விபத்தில் இதன் கீழ்தளம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. முதல் தளக் கூரைகள் இடிந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடங்களைப் புனரமைப்பு செய்யும்வகையில், நீதீபதி பத்மநாபன் தலைமையில் 2007-ல் ஏற்படுத்தப்பட்ட குழுவினரால் ஹுமாயூன் மகால் கட்டிடம் முதல்வகை புராதனக் கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் புராதன இந்தோ-சராசனிக் கலை கட்டிடமான இக்கட்டிடத்தை புனரமைக்க தமிழக அரசால் ரூ.41.12 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழமையான தீர்வை பூச்சு முறையில் சுண்ணாம்பு பூச்சுக் கலவை கொண்டு, உட்புறச் சுவர்கள் பாரம்பரிய முறையில் புனரமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டிடத்தின் தரைமற்றும் 2 தளங்களின் மொத்த பரப்பு 76,567 சதுர அடியாகும். தற்போது 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பணிகள் துரிதப்படுத்தி, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் மேற்பார்வையில், 85 பாரம்பரியமிக்க மற்றும் புராதனக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 35 கட்டிடங்கள் ரூ.150 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறைச் செயலர் தயானந்த்கட்டாரியா, தலைமைப் பொறியாளர் எம்.விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியாளர் எம்.வாசுதேவன் உடனிருந்தனர் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.