

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோயில் ஆதீனம் ல சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நேற்று வயது மூப்பு காரணமாக முக்தியடைந்தார்.
கும்பகோணம் அருகே பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27-வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்(102) நேற்று முக்தியடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனமடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகளில் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித் தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சேவைப் புரிந்தார்.
பின்னர், திருவாவடுதுறை 23-வது சந்நிதானமாக இருந்தல சிவப்பிரகாச தேசிகபரமாச்சார்யா சுவாமிகளிடம்மந்திர கஷாயம் பெற்று, சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு, ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததைஅடுத்து, 27-வது பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி, 35 ஆண்டுகளுக்கு மேலாகஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார்.
சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு, தமது அருளாட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார். பழமையான கோயில்களைப் புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முக்தியடைந்த லசங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல், மடத்தின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.