

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சிஐஎஸ்எப் மற்றும் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது தலையில் குண்டு பாய்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு கடந்த டிச.30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும்(சிஐஎஸ்எப்), தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, இங்கிருந்து துப்பாக்கியால் சுட்டதில், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில், பாட்டி வீட்டுக்கு வந்திருந்த கொத்தமங்கலப்பட்டி கூலித் தொழிலாளி கலைச்செல்வன் மகன் புகழேந்தியின்(11) தலையில் குண்டு பாய்ந்தது. ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின்பேரில் இலுப்பூர் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி விசாரித்து வருகிறார். அதன்படி, இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு ஆஜராகி விளக்கம்அளித்தனர்.
நேற்று பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் கோட்டாட்சியர் விசாரித்தார். துப்பாக்கி சுடும் தளத்துக்கு வருவாய்த் துறை அலுவலர்களுடன் சென்று விசாரணையில் ஈடுபட்டார். துப்பாக்கி சுடும் தளத்துக்கும், சிறுவன் இருந்த இடத்துக்கும் இடையே உள்ள தொலைவு அளந்து கணக்கிடப்பட்டது. அப்போது, விசாரணை அறிக்கையை ஓரிரு நாட்களில் ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நார்த்தாமலையிலும், சிறுவனின் சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டியிலும் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, 'உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நார்த்தாமலை பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும்' என வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தைநடத்தினர். இந்த மறியலால் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிவாரணம் அறிவித்த முதல்வர்
தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில், சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்நடத்தினர். இந்நிலையில், சிறுவனின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.