

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இறக்குமதி பஞ்சுக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீதவரியை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நீக்குவது அவசியமானது என்று பஞ்சாலைகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, திருப்பூர் பின்னலாடைத் துறை நூல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகள், அவற்றுக்கான துணி, வீட்டு உபயோகத்துக்கான ஜவுளி என பருத்தி நூலை மூலப்பொருளாகக் கொண்டுள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்துவரும் நூல் விலை யால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாதந்தோறும் முதல் தேதி பஞ்சு விலைக்கு ஏற்றவாறு நூல் விலையை நூற்பாலைகள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த 1-ம் தேதி அறிவிக்கப்பட்ட விலையில் அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.30 விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் தொடங்கி கடந்த ஓராண்டில் ரூ.150 வரை நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.10 விலை குறைந்திருந்தது.
இதுகுறித்து, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் (சைமா) தலைவர் ரவிசாம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
பஞ்சு கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நமது நாட்டில் பருத்தியை விளைவிக்கும் விவசாயிகள் இன்னும் விலை உயரும் என்ற நோக்கில், விளைந்த பருத்தியை விற்காமல் இருப்பு வைக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த அக்டோபரில் தொடங்கி தற்போது வரை 180 முதல் 200 லட்சம் பேல் பருத்தி சந்தைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 125 லட்சம் பேல் மட்டுமே வந்துள்ளன.
மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீதம் வரி விதிப்பு செய்துள்ளது. உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படும்போது, நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். அதனால் உள்நாட்டில் விலை உயராமல் இருந்தது. தற்போது வரிவிதித்துள்ளதால், இறக்குமதி அளவு குறைகிறது. தேவை அதிகரிக்கும்போது விலை உயர்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டில் கேண்டி (355 கிலோ) ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பருத்தி பஞ்சு, அதே ஆண்டு அக்டோபரில் ரூ.55 ஆயிரத்துக்கும், கடந்த அக்டோபரில் ரூ.64 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. தற்போது ரூ.70 ஆயிரம் முதல் ரூ.73 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் சர்வதேச பஞ்சின் விலை கிலோ ரூ.131 ஆகவும், இந்திய பஞ்சின் விலை கிலோ ரூ.122 ஆகவும் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி பஞ்சுக்கு வரி விதிக்கப்பட்ட பிறகு, படிப்படியாக இந்நிலை மாறி, தற்போது சர்வதேச பஞ்சு ரூ.185-க்கும், இந்திய பஞ்சின் விலை ரூ.197-க்கும் விற்பனையாகிறது.
இதேநிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் பஞ்சு கேண்டி ரூ.80 ஆயிரத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. அந்த நிலைக்கு சென்றால் தொழில் நசியும் நிலைக்கு சென்று விடும். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் தொழில்களை அழித்துவிட்டு விவசாயிகளுக்கு நன்மை செய்து என்ன பயன்? எனவே, மத்திய அரசு உடனடியாக இறக்குமதி பஞ்சுக்கான 11 சதவீத வரி விதிப்பை நீக்கி, தொழிலை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.