

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதிமுகவினர் கிராமப்புறங்களிலும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. அந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக - காங்கிரஸ் எதிர்ப்பு அலை கடுமையாக வீசியது. அந்த சூழ்நிலையிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்த தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் களப்பணியில் வேகம் காட்டி வருகிறது அதிமுக.
இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ஒன்றியம், நகரம் அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டோம். இப்போது தினமும் 5 பேரூராட்சி, 5 கிராம ஊராட்சிகளில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். அதிமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம்” என்றார்.
அதிமுகவினர் நடத்தும் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இதன் மூலம் கிராம மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதைக்கு மற்ற கட்சிகளை விட களப்பணியில் முந்தி நிற்கும் அதிமுக, தேர்தல் களத்திலும் ஜொலிக்குமா என்பது போகப்போகத் தான் தெரியும்.