Published : 04 Jan 2022 09:56 AM
Last Updated : 04 Jan 2022 09:56 AM

ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை பறக்கும் ரயில்சேவை தடத்தில் வேளச்சேரி - ஆதம்பாக்கம் வரை பணிகள் முடிந்து 8 மாதம் ஆகிறது. இருப்பினும், இந்த தடத்தில் இன்னும் மின்சார ரயில் சேவை தொடங்காதது, பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, வேளச்சேரி - பரங்கிமலை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணியை ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. மொத்தமுள்ள 5 கிலோமீட்டரில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதைகள் வேகமாக அமைக்கப்பட்டன.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பணிகள், தற்போது ஆதம்பாக்கம் வரை நிறைவடைந்துள்ளதால், வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரையில் மின்சார ரயில்களின் சேவையை நீட்டிக்கலாம் என தெற்கு ரயில்வே முடிவு செய்தது. ஆனால், இந்த தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் வந்து ஆய்வு நடத்தி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், பணிகள் முடிந்து 8 மாதங்கள் ஆகியும் மின்சார ரயில் சேவை நீட்டிக்கப்படாமல் இருக்கின்றன. இது, ரயில் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து வசதி முக்கியமானதாக இருக்கிறது. வேளச்சேரி - பரங்கிமலை இணைப்பு ரயில் திட்டப்பணிகள் சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கின்றன. சென்னையில் முக்கிய ரயில் இணைப்பு வசதியாக இருக்கும் இந்த திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது ரயில் பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றினால், பல ஆயிரக்கணக்கான மக்கள் நேரடி ரயில் சேவையை பெற முடியும். குறிப்பாக, சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல், பரங்கிமலை மற்றும் மெட்ரோ ரயில் சேவையை பெறவும் மிகவும் உதவியாக இருக்கும். பணி நிறைவு செய்யப்பட்டுள்ள வேளச்சேரி -ஆதம்பாக்கம் தடத்தில் மின்சார ரயில்சேவையை நீட்டித்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.’’என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்டப்பணிக்கு நீண்டநாட்களாக இருந்த நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைய இன்னும் ஓராண்டாகும். பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள வேளச்சேரி - ஆதம்பாக்கம் தடத்தில் ரயில்சேவை நீட்டிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x