கடலூர் சின்ன குப்பத்தில் கடலரிப்பால் சேதமடைந்துள்ள கட்டிடங்கள்.
கடலூர் சின்ன குப்பத்தில் கடலரிப்பால் சேதமடைந்துள்ள கட்டிடங்கள்.

கூவத்தூர் அடுத்த கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த கட்டிடங்கள் சேதம்: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

Published on

கூவத்தூர்: கூவத்தூரை அடுத்த கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த, மீன் இறங்குதளம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பாதிக்கப்படையும் முன் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூரை அடுத்த கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம், ஆலிக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடலோரத்தில் மீனவர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதிகளில் தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருவதால், கரை சேதமடைந்து வருகிறது. மேலும், கடற்கரை முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால், மீனவர்கள் மீன்பிடி படகுகளை நிறுத்த கரையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்ந்து நீடித்து வரும் கடலரிப்பால் மீனவர்களின் பல்வேறு பயன்பாட்டுக்காக கரையில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், வலை உலர்த்தும் கட்டிடங்கள், மீன் பதப்படுத்தும் கட்டிடம் மற்றும் கடலோரத்தில் இருந்த மீனவர்களின் வீடுகள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் கடலரிப்பால் மீனவர்கள் கைவிட்ட 2 வீடுகள் இடிந்து விழுந்தன. இதேநிலை தொடர்ந்தால், அப்பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களும் கடலில் முழ்கும் நிலை உள்ளது. அதனால், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது: கடலூர் சின்ன குப்பத்தில் தற்போதுள்ள கடல், 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தது. ஆனால், தொடர்ந்து நீடித்து வரும் கடல் சீற்றத்தால் 200 மீட்டர் கடற்கரை முழுவதும் அழிந்துவிட்டது.

கடல்நீர் தொடர்ந்து முன்னேறியதால், கரையில் இருந்த வீடுகளை விட்டு வெளியேறி சற்று தொலைவில் உள்ள பகுதியில், நாங்கள் வீடுகள் அமைத்து வசித்து வருகிறோம். ஆனால், தொடர்ந்து கடல்நீர் முன்னேறினால் என்ன செய்வதென்று தெரியாத நிலை உள்ளது. அதனால், கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in