Published : 04 Jan 2022 10:35 AM
Last Updated : 04 Jan 2022 10:35 AM

அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ‘சாட்டை’ துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர்: ஃபாக்ஸ்கான் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் கடந்த மாதம் வழங்கப்பட்ட உணவில் நச்சுத் தன்மை ஏற்பட்டு, 159 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், 9 பேர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனால், ஆலை ஊழியர்கள் 16 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு, இறந்ததாக கூறப்பட்டவர்கள் நலமாக இருப்பது தெரியவந்ததால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக விசாரணை நடத்தினர். அவ்விசாரணையின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த ’சாட்டை’ துரைமுருகன்(35) என்பவர் மீது வன்முறையை தூண்டுதல், அவதூறு செய்தி பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் 19-ம் தேதி இரவு அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இச்சூழலில், `சாட்டை’ துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ், சிறையில் அடைக்க திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், ’சாட்டை’ துரை முருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, அவரை நேற்று புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x