

ஓர் உருவம், பல வடிவங்கள் பெறுவதைப் போல, வெவ்வேறு வண்ணக் கலவைகளில் 180 விதமான வண்ணத்துப்பூச்சி வரைபடங்கள் தேவராயபுரம் அரசுப் பள்ளியில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. நுட்பமான இந்த ஓவியங்களை வரைந்தது 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது ஆச்சரியமான செய்தி.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம். இங்குள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 360 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப்புறம் என்பதால் இங்கு தொழில்நுட்ப வசதிகள், நவீன பொழுதுபோக்குகள் குறைவாகவே உள்ளன. இதனால் ஏழை, எளிய மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீணாகும் காகிதங்களை குப்பையாக்காமல், அவற்றிலிருந்து பலவிதமான உருவங்களையும், கலைப் பொருட்களையும் மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும் ஓர் உருவத்தை பலரும், பலவகைகளில் ஓவியங்களாக வரையும் பயிற்சியையும் இவர்கள் பெற்று வருகின்றனர்.
அடுத்ததாக, வண்ணத்துப்பூச்சி மாதிரியை வைத்து 180 விதங்களில் அதை வரைபடங்களாக வரைந்து, நேர்த்தியான வண்ணங்களால் ஓவியங்களை உருவாக்கியுள்ளனர் இப்பள்ளி மாணவர்கள்.
இந்த ஓவியங்களைப் பள்ளி வளாகத்துக்குள்ளேயே காட்சிக்கும் வைத்துள்ளனர். ஓவியங்களை மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பார்த்துச் செல்கின்றனர்.
ஓவியப் போட்டி நடத்தி, முதல் 4 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு கைக்கடிகாரம், மற்றவர்களுக்கு ஓவியத்துக்கு தேவையான பொருட்களையும் வழங்கி மாணவர்களை, ஆசிரியர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
ஓவிய ஆசிரியர் வி.ராஜகோபால் கூறும்போது, ‘மற்ற ஓவியங்களைப் போல அல்லாமல் வண்ணத்துப்பூச்சியின் இருபுறமும் சமச்சீரமைப்பு கொண்டதாக இருப்பதால், இந்த வகை ஓவியங்கள் மாணவர்களுக்கு சவாலானதாக இருக்கும். வண்ணத்துப்பூச்சி இயல்பாகவே வண்ணங்களை உடையது. எனவே அதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இப்படிப்பட்ட பயிற்சிகளால் யோசிக்கும் திறன், புதுமையான யோசனைகள் உருவாகும். மேலும் மனதளவில் ஒருங்கிணைப்பு கிடைக்கும். புத்தகங்களில், பாடத் திட்டங்களில் வரும் ஓவியங்களால் மாணவர்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அதனாலேயே இதுபோன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறோம்’ என்றார்.