Published : 04 Jan 2022 09:47 AM
Last Updated : 04 Jan 2022 09:47 AM

பக்தி மட்டுமே மனிதனை எந்த துன்பத்திலும் தற்காத்து கொள்ளும்: ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி

வேலூர் ஸ்ரீ நாராயணிபீடம் சக்தி அம்மாவின் 46-வது பிறந்த நாளையொட்டி, நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அதன் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேரில் சென்று வஸ்திரங்களை வழங்கி ஆசி பெற்றார். அருகில் (வலது புறம்) ஆந்திர மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி உள்ளிட்டோர்.

வேலூர்

பக்தி மட்டுமே மனிதனை எந்தத் துன்பத்திலும் தற்காத்துக் கொள்ளும், பக்தி இல்லையெனில் நமக்கு வரும் கஷ்டங்களை நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியாது என ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி வழங்கினார்.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோயில் உருவாக்கிய ஸ்ரீசக்தி அம்மாவின் 46-வது ஜெயந்தி விழா, ஸ்ரீநாராயணி பீடத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 17-ம் தேதி முதல் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நாராயணி பீடத்தில் நடைபெற்றன.

நேற்று காலை கணபதி யாகம், ஆயுஷ் ஹோமம், நாராயணி மூல மந்திர யாகம் மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது. பிறகு மலர்களால் சக்தி அம்மாவுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சக்தி அம்மா பேசும்போது, "பக்தி என்பது ஒரு மனிதனை சமன்படுத்தி துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள சக்தி அளிக்க வல்லது. எனவே, மனிதர்கள் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மனிதனுக்கு பக்தி வரும்போது ஒழுக்கம், கட்டுப்பாடு, அமைதி, சந்தோஷம், சக்தி ஆகியவை தேடி வரும். எனவே, ஆன்மிகத்தை நாம் தேடிச் செல்லவேண்டும்" என்றார்.

சக்தி அம்மாவின் பிறந்த நாளையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பட்டு வஸ்திரங்களை சக்தி அம்மாவிடம் நேரில் வழங்கி ஆசி பெற்றார். இவருடன், ஆந்திர மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திராரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகளும் உடன் சென்று சக்தி அம்மாவை தரிசித்து ஆசி பெற்றனர். மேலும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேத பண்டிதர்கள் சக்தி அம்மாவுக்கு வேத மந்திரங்கள் ஓதி பல்லாண்டு வாழ ஆசி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் விஜய் சாம்ப்லா, கலவை சச்சிதா னந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங் கேஸ்வர சுவாமி, வாலாஜா தன்வந்திரி பீடம் முரளீதர சுவாமிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், ஸ்ரீபுரம் இயக்குநர் சுரேஷ் பாபு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் அறங்காவலர் சௌந்தரராஜன், மேலாளர் சம்பத் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x