

உதகை: தமிழக அரசு வழங்கும் ‘பொங்கல் பரிசு தொகுப்பு’ வரவேற்கத்தக்கது என மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பொது விநியோக திட்டம் மற்றும் ரேஷன் கடையை மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பேசும் போது, ‘நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 403 நியாயவிலைக் கடைகள் உள்ளன. அவற்றில் 298 முழுநேர நியாய விலைக் கடைகளும், 105 பகுதிநேர கடைகள் மற்றும் 33 நடமாடும் நியாய விலைக்கடைகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் தமிழ்நாடு உணவு பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் ஆறு கிடங்குகள் உள்ளன. இவற்றின் மொத்தம் கொள்ளளவு 11,310 மெட்ரிக் டன். மேலும், அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை தணிக்கை மேற்கொண்டு மொத்தம் உள்ள 16,624ல் 7,610 குடும்ப அட்டைதாரர்கள். பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளதால், இத்திட்டத்திலிருந்து நீக்கம் செய்து, முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை வகைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.
கூட்டத்தில், மத்திய உணவுத்துறை செயலாளர் சுபான்ஷூ பாண்டே பேசியதாவது: அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை தணிக்கை மேற்கொண்டது போலவே, முன்னுரிமை குடும்ப அட்டைகளை தணிக்கை மேற்கொண்டு, முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூனிறு மாதங்களுக்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து உண்மைத் தன்மையின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் பெறாத அரிசி, குடும்ப அட்டைகளை கண்டறிந்து அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் எப்பொருளும் வேண்டாத குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலத்தவர்களும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பயன்பெற ‘மேரா ரேஷன்’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதமரின் கரீப் கல்யான் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் மும்மடங்காக உயர்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னிலிலிருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் நுகர்வில் நாட்டில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு ஊக்கவிக்கப்படுகிறது. இந்தாண்டு எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு10 சதவீதமாக உயரும்.
வேளாண் கழிவுகள் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும். 82 கோடி லிட்டர் எத்தனால் தேவை உள்ள நிலையில், 11 டிஸ்டீலரிஸ் மூலம் 10 முதல் 11 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.
எத்தனால் கலப்பு பெட்ரோல் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெருகும், சுற்றுச்சூழல் மாசு குறையும் மற்றும் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.
தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பொது விநியோக திட்டம் நாட்டிலேயே சிறப்பானது. பொங்கல் பண்டிகைக்காக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி உணவு மானியத்தை தமிழகத்துக்கு வழங்குகிறது. கரோனா காலகட்டத்தில் வழங்கப்பட்ட உணவு தானியங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி என ரூ. 26 ஆயிரம் கோடி மானியம் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.