Published : 03 Jan 2022 07:57 PM
Last Updated : 03 Jan 2022 07:57 PM

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்; சிறப்பாகச் செயல்பட்ட தமிழக எம்.பி.க்களில் செந்தில்குமார் முதலிடம்: ப்ரைம் பாயின்ட் ஆய்வில் தகவல்

தருமபுரி எம்.பி. செந்தில் குமார்.

சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக எம்.பி.க்களில் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் முதலிடத்தில் உள்ளார் என்று ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்படும் எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருதை ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

விவாதங்களில் பங்கேற்பது, அதிக கேள்விகள் எழுப்புவது, தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்வது ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படுவோர், சிறந்த முதல் முறை எம்.பி. மற்றும் சிறந்த பெண் எம்.பி. ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதே புள்ளிகளின் அடிப்படையில்தான் அனைத்து மாநில எம்.பி.க்களின் செயல்பாடும் கணிக்கப்பட்டு இறுதியாக விருதுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழகம், புதுச்சேரி எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் கே.சீனிவாசன் கூறியதாவது:

''விவாதங்களில் பங்கேற்பதில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார். 69 விவாதங்களில் இவர் பங்கேற்றுள்ளார். விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் அதிகப்படியான தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். மொத்தம் 4 தனிநபர் மசோதாக்களை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தருமபுரி எம்.பி. செந்தில்குமார் அதிகப்படியான கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர் 267 கேள்விகளைக் கேட்டுள்ளார். வருகைப் பதிவிலும் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் 99 விழுக்காடு வருகைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார்.

இவை தமிழக, புதுச்சேரி நிலவரம்தான் எனக் கூறும் ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்ரீனிவாசன், கடந்த 15-வது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி. ராமசுப்பு சிறந்த எம்.பி. விருது வாங்கியதற்குப் பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த எவருமே ‘சன்சத் ரத்னா’ விருதைப் பெறவே இல்லை.

மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதில் எப்போதுமே மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில எம்.பி.க்கள்தான் அதிக துடிப்புடன் செயல்படுகின்றனர். நம்மவர்கள் கட்சி பேதமின்றி தலைமைக்குத் துதிபாடுவதிலேயே முக்கியமான நேரங்களைச் செலவழித்துவிடுகின்றனர்.

முதல் முறை எம்.பி.க்களுக்காவது நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளித்து அனுப்ப வேண்டும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதல்வரும் பிற கட்சித் தலைவர்கள் தங்களின் எம்.பி.க்களைச் சந்தித்து மாநிலத்தின் தேவைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளின் பட்டியலைக் கொடுத்து விடுகின்றனர். இங்கேயும் அதேபோன்ற நடைமுறை வரவேண்டும்.

நாடாளுமன்றத்தை முடக்குவது என்பது மறைமுகமாக அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதே தவிர வேறு எதுவுமில்லை. நாடாளுமன்றத்தில் அரசைக் கேள்விகளால் திணறடிக்க வேண்டும்.

விதி எண் 377ன் கீழ் எழுத்துபூர்வமாகக் கூட கேள்விகளைக் கேட்கலாம். அவற்றிற்கு ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் வாயிலாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்தே தீர வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்க நல்ல நல்ல உத்திகள் இருக்கின்றன. அவற்றை நமது எம்.பி.க்கள்தான் சரிவரப் பயன்படுத்துவதில்லை. தனிநபர் மசோதாக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவற்றைப் பயன்படுத்தி நிறைய காரியம் சாதிக்கலாம். தமிழக எம்.பி.க்கள் இன்னும் திறம்படச் செயல்பட வேண்டும். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து எடுத்துரைக்கவுள்ளேன்''.

இவ்வாறு பிரைம் பாயின்ட் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x