ஆலங்குடி அரசுப் பள்ளியில் மஞ்சள் சேலையுடன் வரவேற்ற ஆசிரியைகள்: மஞ்சப்பையின் தாக்கமென அமைச்சர் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை மஞ்சள் சேலை அணிந்து வரவேற்ற ஆசிரியைகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை மஞ்சள் சேலை அணிந்து வரவேற்ற ஆசிரியைகள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று (ஜன.3) வந்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரை மஞ்சள் சேலை அணிந்து ஆசிரியைகள் வரவேற்றனர். இது மஞ்சப்பை திட்டத்தின் தாக்கமென அமைச்சர் நெகிழ்ச்சி அடைந்தார்.

ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்தல், மாணவிகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல்-காலநிலைமாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார். இவரை, ஆசிரியைகள் பள்ளி வாசலில் திரண்டு வரவேற்றனர். அங்கிருந்து, விழா மேடை வரை மாணவிகள் இரு வரிசையில் நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

இப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை எஸ்.கவுசல்யா தலைமையில் பணிபுரியும் ஆசிரியைகள் 35-க்கும் மேற்பட்டோரும் சீருடை போன்று மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து வரவேற்றனர்.

இவ்வாறு மஞ்சள் சேலை அணிந்திருந்ததை, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகத் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் மீண்டும் மஞ்சள் பையைப் பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அண்மையில் தொடங்கிய 'மஞ்சப்பை' திட்டத்தின் தாக்கமாகக் கருதி அமைச்சர் நெகிழ்ச்சி அடைந்ததோடு, ஆசிரியைகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in