Published : 14 Mar 2016 09:46 AM
Last Updated : 14 Mar 2016 09:46 AM

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல்: டிஎம்எஸ் மே தின பூங்கா பணிகள் மேலும் தாமதம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிஎம்எஸ் மே தின பூங்கா, திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணிகள் மேலும் தாமதமாகும்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சைதாப்பேட்டையில் இருந்து மே தின பூங்கா வரையிலான பணிகளை மேற்கொண்டு வந்த நிறுவனம் பணிகளை திட்டமிட்ட காலத்தில் முடிக்காத காரணத்தால் திடீரென வெளியேற்றப்பட்டது. பின்னர், எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, “சைதாப்பேட்டையில் இருந்து டிஎம்எஸ் வரையிலான பணிகளை ரூ.640 கோடி செலவில் மேற்கொள்ள எல் அண்டு டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளது. அதேசமயத்தில் டிஎம்எஸ் - மே தின பூங்கா இடையிலான பணிக்கு திட்ட மதிப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக பிரச்சினை எழுந்ததால் அங்கு பணிகள் தடைபட்டன.

பின்னர், திட்ட மதிப்பீடு தொகையை கணிசமாக உயர்த்தி டெண்டர் மூலம் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அதாவது, டிஎம்எஸ் மே தின பூங்கா வரையில் சுரங்கப் பணிகளுக்கு அப்கான்ஸ் நிறுவனமும், ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிக்கு எல் அண்டு டி நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பணிக்கான ஆணை மட்டும் வழங்க வேண்டும்.

இதேபோல், வண்ணாரப் பேட்டை இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்கு டெண்டர் இறுதி செய்து, பணி ஆணை மட்டுமே வழங்க வேண்டியுள்ளது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் அரசு புதிய திட்டங்களை அறிவிப்பது, தொடங்குவது கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டம் புதியது அல்ல, ஏற்கெனவே உள்ள திட்ட பணிகளுக்கு டெண்டர் மூலம்தான் நிறுவனம் தேர்வு செய்துள்ளோம்.

எனவே, இது தொடர்பாக துறை செயலாளர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் பணிகள் தொடங்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x