

ஹனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், புத்தாண்டின் போது அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அரசு ஆன்மிகத்துக்கு எதிரான அரசு அல்ல, ஆன்மிகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளோம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் கோயில் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கோயில் அருகில் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். கோயில் அருகில் பக்தர்கள் தங்குமிடம் ஏற்படுத்த முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்லப்படும்.
திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் நீதிபதிகள் முன்னிலையில் தங்கத்தை பிரிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. நீதிமன்ற அனுமதிபெற்று, கோயில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச்சென்று தங்கம் உருக்கப்பட்டு டெபாசிட்டில் வைக்கப்படும். அந்த நிதி சம்பந்தப்பட்ட கோயில்களின் வளர்ச் சிக்கு பயன்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் ரூ.1,640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் 437ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில், ஆக்கிரமிப்பில் வைத்துள்ளவர்கள் அவர்களாகவே முன்வந்து நிலத்தை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும்.
மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து செலுத்தப்படும் வரியின் அடிப்படையில் நமக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு கொடுப்பார், தேவையில்லாத திட்டங்களுக்கு துணிந்து எதிர்ப்பு குரல் கொடுப்பார். இது ஆன்மிக பூமி என்றும் திராவிட நாடு என்பதையும் கருத்தில் கொண்டுமுதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
தமிழக பாஜக தலைவர் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு உதவ வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் நலத்திட்டங்களுக்கு, பாஜகவினர்தான் நீதிமன்றத்துக்கு சென்று தடை பெறுகின்றனர் என்றார்.