Last Updated : 03 Jan, 2022 07:50 AM

 

Published : 03 Jan 2022 07:50 AM
Last Updated : 03 Jan 2022 07:50 AM

தமிழகத்தில் 59 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு: புத்தாண்டு நாளில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

திருச்சி

‘இந்து தமிழ்' நாளிதழில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக 2008-ம் ஆண்டு நேரடி சப் இன்ஸ்பெக்டராக பணிக்குச் சேர்ந்த 59 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல் துறையில் கடந்த 18.1.2008 அன்று 700 பேர் நேரடி சப் இன்ஸ்பெக்டர்களாக பணி அமர்த்தப்பட்டனர். அவர்களில், 170 பேருக்கு ஏற்கெனவே இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. 10 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 14 ஆண்டுகளாகியும் வழங்கப்படாததைக் கண்டித்து, அவர்கள் பணிக்கு சேர்ந்து 15 -வது ஆண்டு தொடக்க நாளான ஜன.18-ம் தேதி சீருடையில் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிய தயாராகி வருவதாக 2008 ‘பேட்ஜ்' சப் இன்ஸ்பெக்டர்களிடையே ரகசியமாக தகவல்கள் பகிரப்பட்டன.

இதுகுறித்து கடந்த டிச.28-ம் தேதி ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது. அதில் 2 ஆண்டுகளாக பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பதைக் கண்டித்தும், உடனடியாக பதவி உயர்வு வழங்கக் கோரியும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கருப்புப் பட்டை அணிய உள்ளதாகவும், இது பணி புறக்கணிப்போ, எதிர்ப்போ, போராட்டமோ கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே தங்களது இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என சப் இன்ஸ்பெக்டர்கள் விடுத்த கோரிக்கையும் அச்செய்தியில் வெளியாகியிருந்தது.

இதையறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, 2008-ல் பணிக்குச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்கள் தொடர்பான பதவி உயர்வு கோப்புகளைப் பெற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, 208 சப் இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் அடங்கிய பணிமூப்பு பட்டியல் (சி - லிஸ்ட்) அன்றைய தினமே வெளியிடப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, சி லிஸ்ட் பட்டியலில் உள்ளவர்களில் பணிமூப்பு அடிப்படையில் முதற்கட்டமாக 59 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டு பரிசு

பதவி உயர்வு பெற்றவர்களில் சிபிசிஐடி பிரிவில் 4 பேர், ‘சைபர் க்ரைம்' பிரிவு தலைமையிடத்தில் 10 பேர், குற்றப்புலனாய்வு பிரிவில் 6 பேர், மத்திய மண்டலத்தில் 10 பேர், தெற்கு மண்டலத்தில் 2 பேர், மேற்கு மண்டலத்தில் 14 பேர், சென்னை பெருநகர காவல்துறையில் 6 பேர், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 2 பேர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் 3 பேர், குற்றப்பிரிவில் 2 பேர் என 59 பேருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக காத்திருந்தவர்களுக்கு புத்தாண்டு நாளில் பரிசு வழங்குவதுபோல தற்போது இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால், 2008 பேட்ஜ் நேரடி சப் இன்ஸ்பெக்டர்களின் கருப்பு பட்டை போராட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனவும், மீதமுள்ள சப் இன்ஸ்பெக்டர்களுக்கு படிப்படியாக பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x