

“பிரதமர் என்றும் ஒரே மனநிலையில் தான் இருக்கிறார். ஆளும்கட்சியான பின் உண்மையை புரிந்து திமுக தான் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக அனைத்து மதத்துக்கும் பொதுவானது. திமுக தான் ஒரு மதத்துக்கு மட்டும் எதிராக செயல்படுகிறது. திமுக என்ன சொல்கிறதோ, அதை கிளி பிள்ளை போல ஒப்பிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் வேலையாக இருக்கிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, மத்திய அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக குற்றம்சாட்டினார்கள். ஆளும்கட்சியான பிறகு உண்மையைப் புரிந்துகொண்டு விட்டார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, தற்போது திமுக ஆளும்கட்சியாக மாறியபோதும் சரி, தமிழகத்துக்கு ஆதரவாகத் தான் பிரதமர் இருக்கிறார். எனவே, பிரதமர் மாறவில்லை. திமுக தான் மாறியிருக்கிறது.
நூல் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுத்தது. தமிழக பாஜக வேண்டுகோளின்படி அந்த வரி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.