பஞ்சவடி கோயிலில் ஹனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம்; 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம்: நாமக்கல்லில் ஒரு லட்சம் வடைமாலை அலங்காரம்

பஞ்சவடி கோயிலில் ஹனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம்; 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம்: நாமக்கல்லில் ஒரு லட்சம் வடைமாலை அலங்காரம்
Updated on
1 min read

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி - திண்டிவனம் சாலை பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில்  மஹா கணபதிக்கும், பட்டாபிஷேக கோலத்தில்  ராமருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்ட வெங்கடாசலபதிக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி ஜன.1-ம் தேதி இக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை ராமர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் மற்றும் கோபூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தனுர்மாத பூஜையும், யாகசாலையில் யஜமான மகாசங்கல்பத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 8.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியில் ராம சொர்ண பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், இளநீர், பன்னீர் மற்றும் மங்கள வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் பூர்ணாஹூதி முடிந்தவுடன் கடம் புறப்பட்டு கோயிலை வளம் வந்து சன்னதி வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு புரோஷணம் நடந்தது. 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகள் கொண்ட பூரண வடமாலைகள் சாற்றப்பட்டது. சிறப்பு அலங்காரம் முடிந்து மகா தீபாராதனை செய்து வேதகோஷங்கள் முழங்க விசேஷ திருவாராதனம் நடந்தது. மாலையில் ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவையொட்டி முத்தமிழ் செல்வி, சொல்லரசி வாசுகி மனோகரன் குழுவினரால் ‘ராமனும் அனுமனும்' என்ற தலைப்பில் இசைச் சொற்பொழிவும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக  ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், உப தலைவர் யுவராஜன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்ராமன் மற்றும் கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நாமக்கல்

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக நின்ற நிலையில் அருள்பாலித்து வருகிறார். இங்கு, ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது மனைவியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in