

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் அறச்சலூர் தலவுமலை கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், திமுகவில் இருந்து விலகி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் இணைந்ததற்காக வடிவேல் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த கொலை வழக்கை உள்ளூர் காவல்துறையினர் சரியான முறையில் கையாள்வார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த கொலை சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். வடிவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வடிவேல் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.