Last Updated : 03 Jan, 2022 09:28 AM

 

Published : 03 Jan 2022 09:28 AM
Last Updated : 03 Jan 2022 09:28 AM

கடன் தள்ளுபடி சான்று கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மீது குற்றச்சாட்டு

உடுமலை

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன்பெற்ற விவசாயிகளில் 3,184 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாமலும், அதற்கான சான்று வழங்காமல் காலம் கடத்தப்படுவதாலும் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து உடுமலை அடுத்த மடத்துக்குளத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

மடத்துக்குளம் தாலுகாவில் 12 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில் 6 சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 6 சங்கங்களில் 1,200 பேருக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை. உடுமலை தாலுகாவில் குடிமங்கலம் ஒன்றியத்தில் 90 சதவீதம்பேருக்கும், உடுமலை ஒன்றியத்தில் 60 சதவீதம் பேருக்கும் மட்டுமேகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழை வைத்துக்கொண்டு சிலருக்கு கொடுப்பது, சிலருக்கு சான்றிதழ்கொடுக்காமல், புதிய பயிர்க்கடன்கொடுப்பது என சிலர் முறைகேடாக செயல்பட்டு வருகின்றனர். தென்னையில் கோகோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஊடுபயிர் செய்தால் மானியமும், கடனும் வழங்குகின்றனர். பால் தரும் மாட்டுக்கு தீவனம் பயிர் செய்திருந்தால் கடன் தர மறுக்கின்றனர். இதற்கு கூட்டுறவு சங்கத்தினர் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 50,037 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது.

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம் தாலுகாக்களை சேர்ந்த 25,000 பேருக்கும், கடந்த 2020-ம் ஆண்டு பயிர்க்கடன் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி ஈரோடுமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைவருக்கும் தணிக்கை செய்து, பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே வழங்கப்பட்டு, புதிதாக பயிர்க்கடன்களை வழங்கி வருகின்றனர்.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் அடங்கலே கொடுக்காத 31,317 பேருக்கு கடன் தள்ளுபடி என்றும், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் கொடுத்த 3,184 பேருக்கு தள்ளுபடி இல்லை எனவும் கூட்டுறவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்செயல், விவசாயிகளை வேதனையடைய வைத்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்வரை விவசாயிகளை திரட்டி தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x