Published : 27 Jun 2014 11:08 am

Updated : 27 Jun 2014 11:08 am

 

Published : 27 Jun 2014 11:08 AM
Last Updated : 27 Jun 2014 11:08 AM

அந்த நாள் ஞாபகம்: சம்பளத்தைத் திரும்பக் கொடுத்த கதாநாயகி!

அறிமுகப் படத்திலேயே தன்பால் ரசிகர்களை ஈர்த்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. புகழின் உச்சியில் இருந்தபோது வேலாயுதம் நாயரைத் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டில் குடியேறினார். இல்லற வாழ்க்கைக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாதென்று நடிப்பைத் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார். சினிமா பார்க்க தியேட்டருக்குச் செல்வதைக்கூட மறந்து போனார். பண்பான கணவர், அன்பான பெண் குழந்தை ஹேமா என்று தெளிந்த நீரோடையாக மண வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒர் அதிசயம் நடந்தது.

தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்ப தேவர் ‘அக்கா தங்கை' என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதற்குக் கதை - வசனகர்த்தா ஆரூர்தாஸ். அக்கா - தங்கை பாசத்தை முன்னிறுத்தி அதற்கு முன் அப்படியொரு படம் தமிழில் வந்ததில்லை. இரண்டுமே கனமான வேடங்கள்.


‘அக்கா வேடத்தில் நடிக்கச் சவுகார் ஜானகியை ஒப்பந்தம் செய்தாகிவிட்டது. தங்கை வேடத்துக்கு யாரைப் பிடிப்பது? கதாசிரியருடன் விவாதித்துக் கொண்டிருந்தார் தேவர். பல பெயர்களைப் பரிசீலித்துவிட்டு இறுதியில் கே.ஆர். விஜயா என்றதும் தேவர் முகம் மலர்ந்தது. ஆனாம் மலர்ந்த வேகத்தில் வாடியது. “அந்தப் பெண் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லையே?” என்று தயங்கினார். “ நீங்கள்போய் கேட்டால் மறுக்கமாட்டார்.” என்றார் தாஸ். புரட்சித் தலைவருக்கு ஜோடியாகப் பல படங்களில் கே.ஆர்.விஜயாவை நடிக்க வைத்தவர். தேவரைப் பலரும் முதலாளி என்று அழைத்தபோது கே.ஆர்.விஜயா தன்னை “அண்ணே...” என்று பாசமாக அழைப்பதில் நெகிழ்ந்துபோவார்.

புன்னகையரசியின் வீட்டுக்குப் போனார் தேவர். அவரது எதிர்பாராத திடீர் விசிட் இன்ப அதிர்ச்சியாக அமைய, நேராக விஷயத்துக்கு வந்தார். “விஜயா தங்கையாக நடித்தால் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடையும். இதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று நாயரைப் பார்த்துக் கேட்டார். தேவர் கேட்டதும் சட்டென்று மனைவியின் முகத்தைப் பார்த்தார் வேலாயுதம். அவ்வளவுதான்... கே.ஆர். விஜயாவின் கண்கள் கலங்கி உடைந்தன. “என்னை மன்னிச்சுடுங்கண்ணே! இனிமே எனக்கு நடிக்க வருமான்னு தெரியல. எல்லாம் மறந்துபோச்சு!” என்றார். ஆனால் தேவரைப் பார்த்து நாயர் சொன்னார், “ சேட்டா.. உங்க படத்துல விஜயா நடிப்பா.. அதுக்கு நான் பொறுப்பாக்கும்” என்றார். நிறைந்த மனதுடன் தேவர் கிளம்பினார்.

தங்கையாகக் கே.ஆர்.விஜயாவும் அக்காவாகச் சவுகார் ஜானகியும் நடித்த அந்தப் படம் வெற்றிபெற்று நூறு நாட்களைக் கண்டது. கே..ஆர். விஜயாவின் திரைப் பயணத்தில் இரண்டாவது அத்தியாயத்தை அந்தப் படம் தொடங்கி வைத்தது.

திறமை இருக்குமிடத்தைத் தேடிவந்த தேவரும், தனது மனைவியின் திறமையை மதித்து ஒரு ஜாம்பவான் வீடு தேடி வந்துவிட்டாரே என்று தனது மனைவியின் தகுதியுணர்ந்து அவரது கலைவாழ்வுக்கு வழிவிட்ட வேலாயுதம் நாயரும் உயர்ந்து நிற்கிறார்கள்.

கே.ஆர். விஜயா இன்னும் ஒருபடி மேலே சென்று உயர்ந்துவிடுகிறார் ஒரு சந்தர்ப்பத்தில். இயக்குநர் மாதவன் இயக்கித் தயாரித்த ‘முகூர்த்த நாள்' பெரும் தோல்வி அடைகிறது. என்றாலும் படத்தின் நாயகியான கே.ஆர்.விஜயாவுக்கு ஒப்பந்தப்படி சம்பளப் பணத்தைக் கொடுக்க அவரது வீட்டுக்குப் போனார் மாதவன். தனது சம்பளப் பணத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு பூஜை அறைக்குச் சென்ற விஜயா, அதைச் சாமிப்படத்தின் முன்பு வைத்து, எடுத்துவந்து இயக்குநரிடமே திரும்பக் கொடுத்துவிட்டார். அரசல்புரசலாக வெளியான செய்தியல்ல இது. மாதவனே நெகிழ்ச்சியோடு அளித்த நேர்காணல் ஒன்றில் வியந்து குறிப்பிட்டது. 400 படங்களையும் கடந்து இன்றும் குன்றாத உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கும் கே.ஆர். விஜயா, தனது திரைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் சாதனை நாயகி. ஆனால் அதைத் தமிழ் ஊடகங்கள் கொண்டாடவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம்.

படங்கள் உதவி: ஞானம்


சாதனை நாயகிகே.ஆர்.விஜயாநாயர்அக்கா தங்கை

You May Like

More From This Category

dream

கனவு மெய்ப்பட...

இணைப்பிதழ்கள்
mobile-homes

நடமாடும் வீடுகள்

இணைப்பிதழ்கள்

More From this Author