Published : 03 Jan 2022 09:32 AM
Last Updated : 03 Jan 2022 09:32 AM

அமைச்சர் கே.என்.நேரு, கொமதேக ஈஸ்வரன் பங்கேற்ற கூட்டத்தில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தல்

கொமதேக சார்பில் சேலத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்என சேலத்தில் நடந்த கொமதேக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சேலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். கூட்டத்தில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் விவசாயிகள் பலருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி, கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் பயனடையும் வகையில், திருமணிமுத்தாறு மேம்பாட்டுத் திட்டத்துக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதிக்கு கொண்டு வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேட்டூர் அணை நிரம்பி இருந்தாலும், அதன் அருகில் உள்ள கொளத்தூர் மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும்.

சேலம்- உளுந்தூர்பேட்டை4 வழிச்சாலையில், போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சேலம் மாவட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாவட்டம். எனவே, மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஏற்றுக் கொள்வர். இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிப்பேன்.

திருமணிமுத்தாறு கழிவுநீர் கலப்பு பிரச்சினை குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு முதல்வர் ரூ.540 கோடி ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றப்படுவதால், 2 ஆண்டுகளில் திருமணிமுத்தாறு தூய்மையாகிவிடும். மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ‘ஜவ்வரிசியை சத்துணவில் சேர்க்க வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தில், விடுபட்டுள்ள நீர் நிலைகளையும் சேர்க்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன், கொமதேக மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், ராஜ்குமார், சரவணன், கோவிந்தராஜ், சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x