

இந்து அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், அனைத்துசார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
துறையின் ஆளுகையின்கீழ்இயங்கி வரும் அனைத்து அறநிறுவனங்களின் ஒவ்வோர் ஆண்டுக்கான உத்தேச வரவு -செலவு திட்டம், 1959-ம் ஆண்டுஇந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்படுகிறது.
தற்போது ஒவ்வோர் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட உத்தேச வரவு-செலவு திட்டம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தற்சமயம், உத்தேச வரவு-செலவு திட்டத்துக்கு அனுமதி வழங்கும்போது, செலவு தொகைகளுக்கான அனுமதி மட்டும் வழங்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படுகிறது.
வரவினத்துக்கான எந்த விவரமும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இந்த குறைபாட்டை சீரமைக்கும் வகையில், அந்தந்த ஆண்டுக்கான செலவுகளின் விவரத்துடன் வரவினத்துக்கான விவரங்களையும் அந்தந்த கோயிலின் பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர், அறங்காவலர், மேலாளர், காரியம், அதிகாரம் பெற்றவர்களின் ஒப்பம் பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்படுகிறது.
நிலங்கள், கட்டிடம் மற்றும் மனை வாடகை, உதவித் தொகைகள், முதலீடு மூலம் வரவு, பிரசாதம் விற்பனை வரவு, இதர வரவுகள், வரவு மூலதனம், வைப்புத்தொகை மற்றும் முன்பணம் வரவு உள்ளிட்ட வரவு விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.