

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட சில இடங்களில் நேற்றும் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறில் 48 மி.மீ. மழை பதிவானது. அம்பாசமுத்திரத்தில் 42 மி.மீ., மணிமுத்தாறில் 39.60 மி.மீ., சேரன்மகாதேவியில் 30 மி.மீ., களக்காட்டில் 26.40 மி.மீ., நாங்குநேரியில் 22 மி.மீ., பாபநாசம், கொடுமுடியாறு அணையில் தலா 12 மி.மீ., திருநெல்வேலியில் 4.40 மி.மீ., மூலக்கரைப்பட்டி, பாளையங்கோட்டையில் தலா 3 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,262 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 905 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 133.90 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.65 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடி க்கு 656 கனஅடி நீர் வந்தது. 118 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 116.65 அடியாக இருந்தது. 50 அடி உயரம் உள்ள வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47.87 அடியாக இருந்தது. 22.96 அடி உயரம் உள்ள நம்பியாறு அணை நீர்மட்டம் 22.20 அடியாக இருந்தது. 52.25 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 46.50 அடியாக இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. கடனாநதி அணையில் 10 மி.மீ., ஆய்க்குடியில் 3 மி.மீ., தென்காசியில் 2.40 மி.மீ. மழை பதிவானது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 75.30 அடியாகவும், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 67.75 அடியாகவும், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 111.25 அடியாக இருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்து வந்தது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் லேசாக பெய்ய தொடங்கிய மழை, பகல் 1.30 மணி வரை விட்டு விட்டு பெய்தது. தூத்துக்குடி பூ மார்க்கெட் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி அடைந்தனர். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் விளாத்திகுளத்தில் 12 மி.மீ., கடம்பூரில் 10 மி.மீ., எட்டயபுரத்தில் 9.3 மி.மீ., காடல்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு ஆகிய இடங்களில் தலா 2 மி.மீ., வைப்பாரில் 1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த கடல் காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு இன்று (ஜன.3) மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட த்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.