

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது இளையமகன் உதயகுமார் (27). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் செல்வகுமார் (33) கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதேபகுதியில் உள்ள கிணற்றில் செல்வகுமார் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது, அவர் நீரில் மூழ்கினார். அப்போது அங்கு வந்த உதயகுமார் கிணற்றில் மூழ்கிய சகோதரரை காப்பாற்ற அவர் கிணற்றில் குதித்தார். இதில், செல்வகுமார் அதிர்ஷட வசமாக உயிர் பிழைத்தார். ஆனால், சகோதரரை காப்பாற்ற முயன்ற உதயகுமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரரை காப் பாற்றச்சென்ற தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் மூழ்கி உயிரிழந்த உதயகுமாருக்கு சுமதி(22) என்ற மனைவியும், ஸ்ரீதர் என்ற 9 மாத ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.