

மதுரை: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில மகளிரணித் தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில், தமிழக பாஜக மாநில மகளிரணித் தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன், மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்க பெருமாள், ஊடகப்பிரிவு செயலர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழக பாஜக மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளான ஜன. 3-ல் (நாளை) சிவகங்கையில் அவரது சிலைக்கு பாஜக சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்கின்றனர். பாஜக மகளிரணியினர் பங்கேற்கும் ஜீவஜோதி ஊர்வலம் நடைபெறும்.
கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசின் எண்ணற்ற திட்டங்களால் இந்தியா மீண்டும் உலகின் வழிகாட்டியாக உயர்ந்துள்ளது. சுதந்திர போராட்டம் என்றால் 1857-ல் நடைபெற்றதை தான் சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே தென்னகத்தில் சுதந்திர போராட்டத்தை வீரமங்கை வேலு நாச்சியார் தொடங்கினார். இதனால் அவரை பாஜக கொண்டாடுகிறது.
மக்கள் மனதில் தேச உணர்வு ஏற்பட வேண்டும். அதற்காக சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்டாட வேண்டும். இந்தியா முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளனர். அவர்களை பற்றி மக்களுக்கு தெரியவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களை அவர்கள் குடும்பத்துடன், மக்களுடன் சேர்ந்து பாஜக கொண்டாடி வருகிறது. இதற்காக பாஜக பெருமை கொள்கிறது.
பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் அனைவருக்கும் பங்கு உண்டு. யார் ஆட்சியில் இருந்தாலும் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பது ஆட்சியில் இருப்பவர்களின் தார்மீகக் கடமையாகும். பெண்கள் கடவுளின் மறு உருவம். இதனால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.