

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு மண்டலங்களிலும், தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கும் வகையில் 15 மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கோவிட் தொற்று பரவல் மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (02.01.2022) ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
1000 கோவிட் பணியாளர்கள்: தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி கோவிட் தடுப்புப் பணியில் ஈடுபட 1000 கோவிட் பணியாளர்கள் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 200 வார்டுக்கு 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வரும் பணியை மேற்கொள்வார்கள். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கும் பணிகளையும் மேற்கொள்வார்கள்.
தொலைபேசி வாயிலாக ஆலோசனை: ஒவ்வொரு மண்டலங்களிலும், தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கும் வகையில் 15 மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் பாதுகாப்பு மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 கோவிட் பரிசோதனை மையங்கள் கடந்த வருடம் செயல்பட்ட இடங்களுக்கு அருகிலேயே ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டுவரும் கோவிட் கண்காணிப்பு மையத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அபராதம் தீவிரம்: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மண்டல அமலாக்கக்குழு மூலம் அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப் படும். இதற்கென மண்டலத்திற்கு 2 குழு வீதம் 15 மண்டலங்களுக்கு 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
20 கார் ஆம்புலன்ஸ்: கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவ மணைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக 20 கார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தயார் நிலை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு 25,000 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை நாளொன்றிற்கு 30,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள 1000 ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.