Published : 02 Jan 2022 01:02 PM
Last Updated : 02 Jan 2022 01:02 PM

தமிழகத்தில் 3-வது அலை; அறிகுறி இல்லாதோருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் இணைந்து மூன்றாவது அலையை ஏற்படுத்திவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்: தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் இணைந்து மூன்றாவது அலையை ஏற்படுத்திவருகிறது. நாளை முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணியை முதல்வர் தொடக்கி வைக்கிறார். அதேபோல், ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியானது 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆனவர்களுக்கு செலுத்தப்படவுள்ளது . முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

வீட்டிலேயே சிகிச்சை: ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது. பெரும்பாலானோர் அறிகுறிகள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். ஆகையால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வர்ச்சுவல் மானிட்டரிங் என்ற அந்த நடைமுறை விரைவில் அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இரண்டு டோஸ் போட்டும் தொற்றுக்கு உள்ளாபவர்களுக்கு ஆலோசனைகளும், இரண்டு டோஸ் போடாமல் பாதிப்புக்கு உள்ளாபவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொடுக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணிக்கப்படுவார்கள், இவர்களுக்கு போதுமான மருத்துவ வழிகாட்டுதல்கள் மருத்துவ நிர்வாகம் மூலம் வழங்கப்படும். பொதுமக்களின் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாநகராட்சி சார்பாக 25384520, 46122300 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

டெலி மெடிசின் சேவை: அண்மையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்தப் பேட்டியில், டெலி மெடிசின் சேவையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறியதாவது: இந்தியாவில் டெலிமெடிசின் சேவைகளை மேம்படுத்த இதுதான் தருணம். புறநோயாளிகள் பிரிவில் தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஒமைக்ரான் அலையில் ஒட்டுமொத்த அழுத்தமும் புறநோயாளிகள் பிரிவில் தான் இருக்கப் போகிறது. ஐசியுக்களில் அனுமதியாவோர் எண்ணிக்கையைவிட வீட்டில் மருத்துவ சேவை தேவைப்படுவோர் மிகமிகமிக அதிகமாக இருக்கப்போகிறது. நோயாளிகளை வீடுகளிலேயே வ்வைத்துப் பராமரித்தல் நல்லது. அது சாத்தியப்படாவிட்டால் தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்கலாம். மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தேவைப்படுவோரை மற்றும் மருத்துவமனைக்கு மாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x