

தஞ்சாவூர்: பருவம் தவறிய மழை காரணமாக டெல்டா, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நாசமடைந்தன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடக்கு சுழற்சி காரணமாக யாரும் எதிர்பாராத நிலையில் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. 31-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மெரினா டிஜிபி அலுவலகத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 5 மணிநேரத்தில் விடாமல் பெய்த மழை சென்னை நகரையே மீண்டும் வெள்ளக்காடாகிவிட்டது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் நள்ளிரவு வரை கனமழை நீடித்துவந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணி பகுதியில் 22 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
தஞ்சை எச்சன் விடுதி 21 செ.மீ., பட்டுக்கோட்டை 18.3 செ.மீ., அதிராம்பட்டினம் 15.9 செ.மீ., மதுக்கூர் 10.7 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது. இதுபோல திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்திருக்கிறது. இங்கு அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் 19 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் முழ்கின.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவம் தப்பி மழை பெய்துவருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறுவடைக்காக ஓரிருவாரங்களே இருந்த நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.