

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு தேமுதிகதலைவர் விஜயகாந்த் நேற்று தொண்டர்களைச் சந்தித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதும் குறைந்துள்ளது. இருப்பினும் கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் நேற்று வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொண்டர்களைச் சந்தித்ததால், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வர வேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து கூறினார்.
கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புத்தாண்டுபரிசாக தலா ரூ.100 வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விஜயகாந்துடன் கட்சியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழகத்தில்நடக்கும் அனைத்து அவலங்களுக்கும் அதிமுக, திமுகதான் பொறுப்பு.மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 8மாதமாகிவிட்ட நிலையில் எத்தனைநாள்தான் கடந்த ஆட்சியையே குறைகூறிக் கொண்டிருப்பார்? திருவொற்றியூர் கட்டிட விபத்தை பார்வையிடச் செல்லாத முதல்வர், திரு.வி.க நகருக்கு திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக நேரில் சென்றது தவறான முன்னுதாரணம்.
தேமுதிக செயல் தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். யாரை செயல்தலைவராக்குவது என்று தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் முடிவு செய்வார்கள்.
தேமுதிக பலவீனமாக இருப்பதாக சிலர் சொல்வது, பார்ப்போரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. ஆட்சியில் இருந்தவர்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடத் தயங்கினாலும் சவாலை எதிர்கொண்டு தனித்து போட்டியிடத் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.