தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி?

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி?
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டுகளில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயமாக்க தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

ஒமைக்காரன் தொற்று பரவல் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று முன்தினம் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜன.14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஜன14-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேசமயம் ஒமைக்காரன் தொற்று மேலும் அதிகரிக்கும் நிலையில் எந்த அறிவிப்பும் வரலாம் என்பதால் மதுரை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் ஜல்லிக்கட்டு தொடர்பான அறிப்புகளை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் உள்ளன. இருப்பினும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு ஜல்லிக்கட்டு ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

தனி வழிகாட்டு நெறிமுறைகள்

அதேசமயம் காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காண வரும் பார்வையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று தனி வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு கட்டுப்பாடுகளை அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் மதுரை மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘இனிதான் ஜல்லிக்கட்டுக்கான தனி வழிகாட்டுதல் நெறிமுறைகள் வரும். அதில் அரசு என்ன கூறுகிறதோ அதன்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in