Published : 02 Jan 2022 05:44 AM
Last Updated : 02 Jan 2022 05:44 AM

அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தோம். டிச. 31-ல் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்த்தோம்.

அப்போது காற்று சுழற்சி கடல் பகுதியில் இருந்தது. அது கரையை நெருங்கும்போதுதான் மழை வாய்ப்பு குறித்து கணிக்க முடியும். கடல் பகுதியில் கண்காணிப்புக் கருவிகள் ஏதும் இல்லாத நிலையில், அந்தமான் தீவிலிருந்து கிடைக்கும் தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு கணிக்கிறோம்.

சில நேரங்களில் மேகங்கள் வேகமாக நகர்ந்துவிடும். அப்படித்தான் வியாழக்கிழமையும் மேகங்கள் நகர்ந்தன. அப்போது வானிலை மாடலில் மேற்கு திசைக் காற்றும், கிழக்கு திசையில் இருந்து நகரும் மேகங்களும் சந்திக்கும் பகுதி கடலில் இருந்ததுபோல காட்டியது. ஆனால், அது நிலப்பகுதியில் இருந்துள்ளது. இதனால் அதிகனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுஉள்ளது. சென்னையில் 30-ம் தேதிஅதிகனமழை பெய்ததும் அதனால்தான்.

சரியாக கணிக்க முடியாமல் போனதற்கு உபகரணங்கள் பற்றாக்குறை காரணம் இல்லை. ஏனெனில் கடல் பரப்பில் எந்த கண்காணிப்புக் கருவியையும் வைக்க இயலாது. அதன் காரணமாகவே கடலில் ஏற்படும் காற்றின் வேகம், காற்று சுழற்சி போன்ற தரவுகள் கிடைப்பதில்லை.

ரேடாரை வைத்து, அடுத்த சில மணி நேரங்களுக்கான முன்னறிவிப்பை மட்டுமே கூற முடியும். அடுத்த சில தினங்களுக்கான முன்னறிவிப்பை கணிக்க ரேடார்தரவுகள் உதவாது. மேக வெடிப்புஎன்பது, ஒரு மேகம் உருவாகி உடனே வெடித்து அதிக மழையைக் கொடுப்பதாகும். ஆனால் சென்னையில் அதிகனமழை பெய்தபோது, புதிது புதிதாக மேகங்கள் உருவாகி, தொடர்ந்து மழை பெய்தது. எனவே சென்னையில் பெய்தஅதிகனமழைக்கு மேக வெடிப்பே காரணம் என்றும் கூறிவிட முடியாது.

நவீன உபகரணங்கள் தேவை

சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்கிறது. அதற்காக பிற மாவட்டங்களில் ரேடார்களை நிறுவ வேண்டியுள்ளது. வானிலை கணிப்பை மேம்படுத்த நவீனஉபகரணங்களும் தேவைப்படுகின்றன. மேலும், இந்த மழைக்குபருவநிலை மாற்றமும் காரணம் இல்லை. பருவநிலை மாற்றத்தால் மழை பெய்கிறது என்றால், இதுபோன்ற மழை இதுவரை பெய்யாதிருக்க வேண்டும். ஆனால் 1977,1984 உள்ளிட்ட பல்வேறு ஆண்டுகளில் சென்னையில் அதிகனமழை தொடர்ந்து பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x