

புத்தாண்டு தினத்தையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன. அதேபோல, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி அனைத்துதேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி, புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர். அனைவரும் முகக்கசவசம் அணிந்திருந்தனர். ஒருவருக்கொருவர் கைகூப்பி,பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சிஎஸ்ஐ சென்னை திருமண்டல பேராலயமான, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் நடந்த புத்தாண்டு சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பழமையான வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழுப்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், முண்டகக்கண்ணி அம்மன், சாய்பாபா கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில், வடபழனி முருகன் கோயில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில், மேற்கு சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோயில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பக்தர்கள் நேற்று அதிகாலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர். பல கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.