

அதிமுக ஆட்சியில் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் திறக்கப்பட்ட தோட்டக்கலை விற்பனையகம் (சூப்பர் மார்க்கெட்) மூடப்பட்டதால், அதன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை கதீட்ரல் சாலையில், அண்ணா மேம்பாலம் அருகே உள்ளசெம்மொழிப் பூங்காவில் முந்தைய அதிமுக ஆட்சியில் தோட்டக்கலை விற்பனையகம் திறக்கப்பட்டது.
சுமார் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த விற்பனையம் பேரங்காடியாக செயல்பட்டது. இதில், தோட்டக்கலைத் துறையின் பொருட்கள், குறிப்பாக தோட்டக்கலைத் துறை பண்ணைகளில் விளையும் காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் விற்கப்பட்டன. மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.
கீரை வகைகள், இட்லி பொடி, மூலிகைப் பொடிகள், மாடித் தோட்டத்துக்கான தொட்டிகள், உபகரணங்கள் உள்ளிட்டவையும் இங்கு கிடைத்தன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “செம்மொழிப் பூங்காவில் திறக்கப்பட்ட தோட்டக்கலை விற்பனையகத்தில், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் புத்தம் புதிதாகவும், நியாயமான விலையிலும் கிடைத்தன. தனியார் பழ விற்பனை நிலையங்களைவிட குறைந்த விலையில் பழங்கள் கிடைத்தன.
மேலும், மாம்பழ சீசனில் இமாம்பசந்த், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, ஜவ்வாது உள்ளிட்ட மாம்பழ வகைகளை தரமாகவும், நியாயமான விலையிலும் வாங்கினோம். மாம்பழங்கள் ரசாயனத்தில் பழுக்க வைக்கப்படாமல், இயற்கையாக பழுக்கவைத்து விற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென தோட்டத்கலைத் துறையின் சூப்பர் மார்க்கெட்டை மூடியிருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. விரைவில் இதை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, “செம்மொழிப் பூங்காவில் உள்ள தோட்டக்கலைத் துறை விற்பனையகம் 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. செம்மொழிப் பூங்கா புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. அப்போது இந்த விற்பனையகத்தையும் புனரமைத்து திறக்கும் திட்டம் உள்ளது.
மழையால் விற்பனையகம் சேதமடைந்ததால், அதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனினும், செம்மொழிப் பூங்கா மற்றும் விற்பனையகம் சீரமைப்புப் பணி எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை” என்றனர்.
தோட்டக்கலைத் துறையின் சூப்பர் மார்க்கெட்டை மூடியிருப்பது, பொருட்களை விரும்பி வாங்கிப் பயன்படுத்திய பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.