Published : 02 Jan 2022 06:06 AM
Last Updated : 02 Jan 2022 06:06 AM

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு; 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், கடந்த 2002-ம்ஆண்டு ஜன.2-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சரவணன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில்,அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் அவருடன் தனிமையில் இருந்ததாகவும், ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் அண்ணன் அப்பெண் மீது வீசிய கல்லால்தான் அவர் காயமடைந்தார் என்றும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் நடந்த காலம்,சமூகப் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,குறைந்தபட்ச தண்டனையைவிட குறைவாக தண்டனை வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளதை சுட்டிக்காட்டி, திருவண்ணாமலை நீதிமன்றம் விதித்த7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x